புலிகளுக்கு எந்த மாதிரியான ஆதரவு அளிக்கப்படுகின்றன, அவை சரியா தவறா என்று நிர்ணயிப்பதில் பின்வரும் கருத்துகள் கவணிக்கப்பட வேண்டும்:
1. இந்திய அரசு புலிகளை தீவிரவாதிகளாக தான் கருதுகிறது.
2. தமிழர்கள் இலங்கை அரசால் சிங்களர்களோடு சம உரிமை கொண்டவர்களாக கருதப்படுவதில்லை. இலங்கை அரசு தன் பிரஜைகளை ஒன்று போல் பாவிப்பதில்லை.
3. புலிகள் தான் தற்போதைய நிலையில் பெரும்பாண்மை ஈழவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளவர்கள். (இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது)
4. புலிகள் இந்தியத் தலைவர் ஒருவரைக் கொன்றுள்ளனர். (புலிகளுக்கு காரணம் இருந்திருக்கலாம். இந்தியனாக என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது)
5. புலிகள் ஈழவர்களின் ஆதரவை ஒரு மனதாகப் பெற பிற தமிழ்த் தலைவர்களைக் கொன்றுள்ளனர். (இது நான் கேள்விப்பட்டது)
இந்தியர்கள் புலிகளுக்கு என்ன மாதிரியான ஆதரவு அளிக்கலாம்: இந்த நிலையில் ஒரு இந்தியப் பிரஜை (தமிழனோ அல்லது தமிழன் அல்லாதவனோ) புலிகளுக்கு பொருள் உதவியோ அல்லது வேறு tangible உதவியோ செய்வது உணர்ச்சிகள் அடிப்படையில் சரியென்றாலும் சட்டத்தின் பார்வையில் குற்றமே. அதே சமயம், புலிகளுக்கு ஆதரவு அளிப்பது தான் தமிழர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு காண ஒரே வழி என்று கருதுவோர் இருப்பதில் தவறில்லை. இந்த கருத்து கொண்டவர்கள் அதைப் பற்றி பேசுவதும் (புலிகளுக்கு ஆதரவாக), மக்களின் மத்தியில் புலிகளுக்கு ஆதரவான ஒரு பொதுக்கருத்து கொண்டு வர நினைப்பதும் தவறில்லை. அது ஜனநாயக முறையின் இன்றியமையாத ஓர் அம்சம்.
உணர்ச்சிகளின் அடிப்படையில் புலிகள் ஆதரவு: உணர்ச்சிகளின் அடிப்படையில் (மனிதநேயம், தமிழ் இன உணர்ச்சி, ஹிந்து மத உணர்ச்சி, திராவிட (The non-brahmin identity of TN) உணர்வு) என்று நாம் எந்த வகையில் ஈழவர்களுக்கு ஆதரவு காண்பித்தாலும், அது பிரதானமாக ஈழவருக்கு தான் என்பதும், அவர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாலும் ஈழவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரதான அமைப்பு என்பதாலும் தான் புலிகளுக்கு என்பதும் தெளிவாக்கிக் கொள்ளப்பட வேண்டும். இதனால், ஈழவருக்கு உதவலாம் ஆனால் புலிகளுக்குக் கூடாது என்ற கருத்து உடையவர்கள், வேறு முயற்சிகள் மேற்கொள்வதில் தவறு இல்லை.
கருத்துக்களின் அடிப்படையில் புலிகள் ஆதரவு: ஈழவர்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்றிருப்பதாலும் ஈழவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரதான அமைப்பு என்பதாலும் புலிகள் பிற நாட்டிலிருந்து தமிழர்களின் பிரதிநிதிகளாக உதவிகள் பெறுவதற்கு இயற்க்கையாகவே தகுதி உடையவர். ஆனால் அவர்களின் சில கேள்விக்குறிய நடவடிக்கைகளும் (எ.கா.: பிற தமிழ்த் தலைவர்களைக் கொன்றது) இந்தியாவிற்கு எதிரான செயல்களும் (அதன் ஒரு தலைவரைக் கொன்றது) கூட இந்தியாவின் நிலைபாட்டை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். எவை எவை இந்தியாவின் நிலைபாடுகளாக இருக்கலாம்?
1. ராஜீவ் கொலையினால் இந்தியாவில் ஏற்பட்ட புலிகளின் மேல் உள்ள த்வேஷம் குறையும் வரை இலங்கை அரசை நிர்பந்திப்பதும் சர்வதேச அளவில் இலங்கை அரசின் கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதுமாக இருக்கலாம்.
2. ராஜீவின் கொலைக்கு புலிகளை தண்டிப்பதை விட ஈழவர்களின் நலன் தான் முக்கியம் என்ற கருத்து மேலோங்கினால், தற்காலிகமாக புலிகளை ஆதரித்து பின் பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களை தண்டிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
3. எந்த காரணத்தினாலும் ராஜீவின் கொலை தற்காலிகமாகக் கூட மன்னிக்கப்படக் கூடாது என்ற கருத்து மேலோங்கினால், இந்தியா இலங்கையில் இருக்கும் ஈழவர்களின் alternative தலைவர்களை ஊக்குவித்து ஈழவர்கள், சிங்களர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழவர்கள் மத்தியில் இவர்களுக்கு ஆதரவு தேடலாம்.