Friday, April 11, 2008

மொழிகளை பாசக்கயிறிலிருந்து மீட்பதெப்படி?

உலகமயமாக்கத்தினால் பல சிறு மொழிகள் அழிவது ஒரு புறம். அதே சமயம், ஒவ்வொரு செல்வாக்குள்ள பெருமொழியும் அதன் அருகாமையில் உள்ள சிறு மொழிகளை விழுங்கிக் கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு நாளும், நிமிடமும். என்னை பொருத்த வரை இதற்கு மூல காரணமாக இருப்பது ஆட்சி அதிகாரம் மக்களின் மிக அருகாமையில், அதாவது, கிராம அளவிலும், சிறு வார்டு அளவிலும் இல்லாமல் நாடு, மாநிலம் என்ற பெருவட்டங்களிடம் உள்ளதாகும். நம் மக்களின் பண்பாடுகளை காக்க, உடனடியாக கிராம சுயாட்சி அவசியமாகிறது. தமிழ், ஹிந்தி, வங்காளம் போன்ற மொழிகளுக்கு பிரச்சனை இல்லை. மக்களிடம் மொழியின் முக்கியத்துவம் குறித்து ஓரளவிற்காவது விழிப்புணர்வு உள்ளது. பழங்குடி மக்களிடம் இது கூட இல்லை. அருகாமையில் உள்ள பெருமொழிகள் அவற்றை அன்றாடம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றன். ஆகையால் இதை நிறுத்துவது நாம் நமக்கே செய்து கொள்ளும் ஒரு பேருபகாரம். இந்த கிராம சுயாட்சியின் மூலம் பெருமொழிகளின் வழக்குகளுக்கும் சமூக அந்தஸ்து கிடைக்கும். மக்களுக்கு உண்மையான தாய்மொழியை கையாள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ஒவ்வொரு மனிதனும் தான் பிறருக்கு சமமான மனிதன் தான் என்றும் தான் பேசும் மொழியும் தன்னுடைய கலாச்சாரமும் உலகத்தில் உள்ள பிற மொழிகளையும் கலாச்சாரத்தையும் காட்டிலும் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல என்பதையும் உணர வேண்டும். போலி கர்வம் கொள்ள வேண்டும் என்றோ இல்லாததைத் கொண்டு பெருமை பட வேண்டும் என்றோ அல்லது இருப்பதை கொண்டு பிறரை மட்டம் தட்ட வேண்டும் என்றோ இதற்கு அர்த்தம் இல்லை. எந்த வழக்கையும் போல தன் வழக்கும் கருத்துகள் வெளிப்படுத்த உதவும் என்பதையும் உலகிற்கு வழங்க தன் கலாச்சாரத்திலும் முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பதையும் உணர்த்த வேண்டும் அவர்க்கு. அதன் பிறகு தங்களின் அரிய கலாச்சார விஷயங்களை தன் வழக்கில் வெளிப்படுத்துவதா, சுற்றத்து மக்களின் வழக்கில் வெளிப்படுத்துவதா, அல்லது வேறு ஒரு மொழியில் வெளிப்படுத்துவதா என்பதை ஒவ்வொரு மனிதனும் தீர்மானிக்க வெண்டும். அன்று தான் உண்மையான செம்மைமி்க்க மனித கலாச்சாரத்திற்கு கோல் ஊன்றும் நாள். ஏதோ ஒரு அடையாளத்தின் கட்டாயத்தினால் (மதவாதத்தினால் தன் மதம் கூறும் மொழி, மொழியின வாதத்தினால் ஒரு மொழி, உலகமயமாக்கத்தினால் ஒரு மொழியென்று மனிதனின் இயற்கை வெளிப்பாட்டை திரிக்கும் பல காரணங்கள் உள்ளன) தன் மொழியை தேர்ந்தெடுப்பதால் அரை மனிதர்கள் தான் உருவாவார்கள்.

Tuesday, August 14, 2007

பாலம் ஏன் ராமா?

1. ராமர் பாலம் ராமரால் கட்டப்பட்டது - நம்பிக்கை.
2. ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது - விஞ்ஞானம்.
3. ராமர் பாலம் இயற்கையானது அல்ல ராமரால் கட்டப்பட்டு தான். ஆதாரம் இருக்கிறது - பொய்
4. இவர்கள் பொய் சொல்கிறார்கள். ராமர் பாலம் என்று ஒன்று இல்லை. இதை வெட்டி முன்னேற்றம் காணலாம் - அரசியல் வாதம்.
5. ராமர் பாலத்தை இடிக்காமலும் முன்னேற்றம் கொண்டு வரலாம். - யதார்த்தம்.
ஒரு பக்கம் பொய் பேசும் அரசியல். இன்னொரு பக்கம் காயப்படுத்துவதையே குறியாக வைத்த அரசியல். இடையில் காயம் அடைவதோ ஒன்றும் தெரியாதவர்களின் நம்பிக்கை.

Sunday, August 12, 2007

ஈழவரும் புலிகளும் இந்தியாவும்

புலிகளுக்கு எந்த மாதிரியான ஆதரவு அளிக்கப்படுகின்றன, அவை சரியா தவறா என்று நிர்ணயிப்பதில் பின்வரும் கருத்துகள் கவணிக்கப்பட வேண்டும்:
1. இந்திய அரசு புலிகளை தீவிரவாதிகளாக தான் கருதுகிறது.
2. தமிழர்கள் இலங்கை அரசால் சிங்களர்களோடு சம உரிமை கொண்டவர்களாக கருதப்படுவதில்லை. இலங்கை அரசு தன் பிரஜைகளை ஒன்று போல் பாவிப்பதில்லை.
3. புலிகள் தான் தற்போதைய நிலையில் பெரும்பாண்மை ஈழவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளவர்கள். (இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது)
4. புலிகள் இந்தியத் தலைவர் ஒருவரைக் கொன்றுள்ளனர். (புலிகளுக்கு காரணம் இருந்திருக்கலாம். இந்தியனாக என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது)
5. புலிகள் ஈழவர்களின் ஆதரவை ஒரு மனதாகப் பெற பிற தமிழ்த் தலைவர்களைக் கொன்றுள்ளனர். (இது நான் கேள்விப்பட்டது)
இந்தியர்கள் புலிகளுக்கு என்ன மாதிரியான ஆதரவு அளிக்கலாம்: இந்த நிலையில் ஒரு இந்தியப் பிரஜை (தமிழனோ அல்லது தமிழன் அல்லாதவனோ) புலிகளுக்கு பொருள் உதவியோ அல்லது வேறு tangible உதவியோ செய்வது உணர்ச்சிகள் அடிப்படையில் சரியென்றாலும் சட்டத்தின் பார்வையில் குற்றமே. அதே சமயம், புலிகளுக்கு ஆதரவு அளிப்பது தான் தமிழர்களின் கஷ்டங்களுக்கு தீர்வு காண ஒரே வழி என்று கருதுவோர் இருப்பதில் தவறில்லை. இந்த கருத்து கொண்டவர்கள் அதைப் பற்றி பேசுவதும் (புலிகளுக்கு ஆதரவாக), மக்களின் மத்தியில் புலிகளுக்கு ஆதரவான ஒரு பொதுக்கருத்து கொண்டு வர நினைப்பதும் தவறில்லை. அது ஜனநாயக முறையின் இன்றியமையாத ஓர் அம்சம்.
உணர்ச்சிகளின் அடிப்படையில் புலிகள் ஆதரவு: உணர்ச்சிகளின் அடிப்படையில் (மனிதநேயம், தமிழ் இன உணர்ச்சி, ஹிந்து மத உணர்ச்சி, திராவிட (The non-brahmin identity of TN) உணர்வு) என்று நாம் எந்த வகையில் ஈழவர்களுக்கு ஆதரவு காண்பித்தாலும், அது பிரதானமாக ஈழவருக்கு தான் என்பதும், அவர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாலும் ஈழவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரதான அமைப்பு என்பதாலும் தான் புலிகளுக்கு என்பதும் தெளிவாக்கிக் கொள்ளப்பட வேண்டும். இதனால், ஈழவருக்கு உதவலாம் ஆனால் புலிகளுக்குக் கூடாது என்ற கருத்து உடையவர்கள், வேறு முயற்சிகள் மேற்கொள்வதில் தவறு இல்லை.
கருத்துக்களின் அடிப்படையில் புலிகள் ஆதரவு: ஈழவர்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்றிருப்பதாலும் ஈழவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிரதான அமைப்பு என்பதாலும் புலிகள் பிற நாட்டிலிருந்து தமிழர்களின் பிரதிநிதிகளாக உதவிகள் பெறுவதற்கு இயற்க்கையாகவே தகுதி உடையவர். ஆனால் அவர்களின் சில கேள்விக்குறிய நடவடிக்கைகளும் (எ.கா.: பிற தமிழ்த் தலைவர்களைக் கொன்றது) இந்தியாவிற்கு எதிரான செயல்களும் (அதன் ஒரு தலைவரைக் கொன்றது) கூட இந்தியாவின் நிலைபாட்டை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு வகிக்க வேண்டும். எவை எவை இந்தியாவின் நிலைபாடுகளாக இருக்கலாம்?
1. ராஜீவ் கொலையினால் இந்தியாவில் ஏற்பட்ட புலிகளின் மேல் உள்ள த்வேஷம் குறையும் வரை இலங்கை அரசை நிர்பந்திப்பதும் சர்வதேச அளவில் இலங்கை அரசின் கொடுமைகளை பகிரங்கப்படுத்துவதுமாக இருக்கலாம்.
2. ராஜீவின் கொலைக்கு புலிகளை தண்டிப்பதை விட ஈழவர்களின் நலன் தான் முக்கியம் என்ற கருத்து மேலோங்கினால், தற்காலிகமாக புலிகளை ஆதரித்து பின் பிரச்சனை தீர்ந்தவுடன் அவர்களை தண்டிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
3. எந்த காரணத்தினாலும் ராஜீவின் கொலை தற்காலிகமாகக் கூட மன்னிக்கப்படக் கூடாது என்ற கருத்து மேலோங்கினால், இந்தியா இலங்கையில் இருக்கும் ஈழவர்களின் alternative தலைவர்களை ஊக்குவித்து ஈழவர்கள், சிங்களர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழவர்கள் மத்தியில் இவர்களுக்கு ஆதரவு தேடலாம்.